நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 6ம் நாள் உற்சவம் மாலை (2019-08-11) – Sri Lankan Tamil News

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 6ம் நாள் உற்சவம் மாலை (2019-08-11)

இந்த செய்தியைப் பகிர்க

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 6ம் நாள் உற்சவம் மாலை
இன்று நல்லுர் கந்தனின் ஆறாம் நாள் உற்சவம். ஶ்ரீ கந்தவேள் பெருமான் வள்ளி தேவசேனாதிபதியாக இவ் ஆறம் நாள் உற்சவத்திலே ஆட்டு கடா ஏறிவரும் நாள். இத்தருணத்திலே நாம் சைவத் தமிழ் சிறார்களுக்காக ஒரு கதையயும் பதிவிடுகிறோம். முருகனுக்கு ஆடு வாகனமானது எப்படி?
விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.. ‘அசம் ( அஜம் – ஆடு) மேவிய பெருமாளே ( கனவாலங் – திருப்புகழ்) தகர் இவர் வல் (குன்றுங் குன்றுந் – திருப்புகழ்) என்று அருணகிரியார் குறிப்புடிகிறார்.

இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, ‘இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார்.’. முருகன் சிரித்தான். ‘நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையின் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும்’, என்றார்.

“தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா
மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே “
நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல்
வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே,
மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply