முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்? வெளிவரும் பகீர் தகவல் – Sri Lankan Tamil News

முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்? வெளிவரும் பகீர் தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

என்னவோ முரளிதரன் என்ற பெயரில் உருவெடுத்த பிரமுகர்கள் பலரும் கோடரிக்காம்பாக மாறும் அனர்த்த நிலையே துரதிஷ்டவசமாக இங்கு உள்ளது.

முத்தையா முரளிதரனும், விநாயகமூர்த்தி முரளிதரனும் ஒரே நேர் கோட்டில்தான் சிந்திக்கின்றார்கள் போலும்.

கருணா என்ற முரளிதரன் கூறியிருக்கின்றமை போல தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லைத்தான்.

எதையும் செய்யவில்லை என்பது நல்லவற்றையும் செய்யவில்லை, தீயவற்றையும் செய்யவில்லை எனவும் அர்த்தம் தரும்.

மைத்திரியும், ரணிலும் தமிழர்களுக்கு நல்லவற்றைச் செய்யவில்லை என்பது ஒரு புறம் இருக்க, கருணாவின் இப்போதைய தலைவர்களான மஹிந்த ராஜபக்க்ஷவும், கோட்டாபய ராஜபக்க்ஷவும் தமிழர்களுக்குச் செய்த பேரழிவு, நாசவேலைகள் அளவுக்கு எதையும் செய்யவில்லை என்பதும் உண்மைதான்; வாஸ்தவம்தான்.

இந்த இரண்டு முரளிதரன்களும் ஒரு காலத்தில் தமிழர்களினால் ஏற்றிப் புகழப்பட்டனர் – ஒருவர் போர்க்களத்திலும் மற்றவர் கிரிக்கெட் களத்திலும் வீரர்களாகத் திகழ்ந்த போது தலைவர் பிரபாகரனின் வழிகாட்டலில் ஏனைய மறப்படைத் தளபதிகளுடன் சேர்ந்து வீரம் செறிந்த போராட்டத்தை விநாயகமூர்த்தி முரளிதரன் வெளிப்படுத்தியபோது அவரை கருணா அம்மானாகப் போற்றிப் பெருமைப்பட்டது தமிழினம்.

அதேபோன்று கிரிக்கெட் ஆடுதிடலிலே உலகப் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளனாக முத்தையா முரளிதரன் ஜொலித்த போது சகோதரத் தமிழனுக்குக் கிடைத்த உலகப் பெருமையாக அதைக் கொண்டாடியது தமிழினம்.

இன்று தங்களின் அருவருக்கத்தக்க செயற்போக்கினால் தமிழர்கள் மனதில் குறுகிப் போயிருக்கின்றார்கள் இரு முரளிதரன்களும்.

பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனாவது ஓரளவுக்குத் தேவலை எனலாம்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆழம், பின்னணி, அதன் நியாயம், அதற்குள் புதைந்து கிடக்கும் சத்தியம், உண்மை பற்றிய புரிதல் ஏதும் அற்றவர் அவர். அப்படிப்பட்டவரின் பார்வை விடுதலைப் போராட்டம் தொடர்பில் – அதன் நியாயங்கள் தொடர்பில் – அப்படிக் குறுகியதாகத்தான் இருக்கும்.

நிதியையும், சொத்தையும், வருமானத்தையும் மட்டும் கணக்கிடும் ஒரு பாரம்பரியத்தில் வந்த வர்த்தகக் குடும்ப வாரிசான அவருக்கு, இனக் கலவரத்தால் ஏற்பட்ட வடுக்கள், இழப்புகள் வெறும் நாணயப் பெறுமதியில் அளவிடுவன வாகவே இருந்திருக்கும். அதற்குப் பின்னால் புதையுண்டு அழுந்திப் போய்க் கிடக்கும் இனத்தின் ஆன்மாவின் உயிர்வலியும், அதை மீட்டெடுக்க வேண்டிய சத்தியக் கடப்பாடு தான் உட்பட ஒவ்வொரு தமிழனுக்கும் இருப்பதும் அவருக்கு புரியாது.

அதனால் இழப்புகளை நிதிப் பெறுமானம் போன்று அளவிட்டு அதனடிப்படையில் அவர் பேசுகின்றார். பேரினவாதத்திடம் சிறுபான்மைத் தரப்பு. இனச் சரணாகதி அடைந்தால், அதன் மூலம் தேவையான நிதி வருமானம் கிட்டுமானால், அதுவே வெற்றி வர்த்தகம் என்று மகிழ்ந்து அடங்கிப் போகும் மூன்றாம் தர வியாபார மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள். அப்படித்தான் பேசுவார்கள். அது பற்றி நாம் அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஆனால், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அப்படிச் சிந்திக்கவே கூடாதவர். ஆனால் அதையும் தாண்டிக் கேவலமாகச் செயற்பட்டவர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நீண்ட, நெருக்கடிக் நிறைந்த வரலாற்றை, தனித்துவத்தை, புரட்சிகரப் போக்கை நன்கு புரிந்தவர் அவர்.

தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரச ஒடுக்குமுறையின் ஆழத்தையும், குரூரப் பரிமாணத்தையும், கொடூரப் போக்கையும், இனவாதப் பண்பியல்புகளையும் நேரில் பட்டறிந்து நன்கு உணர்ந்தவர் அவர்.

அத்தகைய கொடூரத்துக்கு எதிரான தமிழர்களின் சத்திய எழுச்சியைக் காட்டிக் கொடுத்துத் காக்கை வன்னியனாகி, அந்தப் போராட்டத்தையே மழுங்கடித்த கோடரிக் காம்பு அவர்.

தான் விலைபோன, பேரினவாத எஜமானர்களான ராஜபக்க்ஷகளுக்காக அவர் அரசியல் பிதற்றல்களைப் பேசுவது ஒன்றும் புதுமையல்ல. காட்டிக் கொடுத்தவர்கள் அப்படித்தான் பேசமுடியும். (காலைக்கதிர் – நமது பார்வை – 11-09-2019)

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply