உருவாக்கப்பட்டுள்ள முக்கோண பாதுகாப்பு வியூகம்! ஆட்டுவிக்குமா அமெரிக்கா? – Sri Lankan Tamil News

உருவாக்கப்பட்டுள்ள முக்கோண பாதுகாப்பு வியூகம்! ஆட்டுவிக்குமா அமெரிக்கா?

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்பேற்றதை அடுத்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், அவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மீள நிகழாமை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிக்கையின் முழுப் பகுதியையும் வெளியிடவில்லை.

இலங்கை மக்கள் தங்களின் ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டுகிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.

பாதுகாப்புத்துறை சீர்திருத்தம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்று மாத்திரம் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மைக் பொம்பியோவின் அந்த டுவிட்டர் பதிவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு பதிலை பதிவிட்டிருந்தார். அதில் அவர் நல்வாழ்த்துக்களை பரிமாறிய செயலாளர் பொம்பியோவுக்கு எனது நன்றி.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் உள் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட வணிக உறவுகள் மற்றும் அமெரிக்காவுடனான பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய இருதரப்பு உறவுகளை வளர்ப்பதை இலங்கை எதிர்பார்த்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் பதிவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எந்த தொடர்பும் இருப்பதை காண முடியவில்லை. ஏனென்றால் மைக் பொம்பியோவின் பதிவு கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

வாழ்த்துச் செய்தியை விட இலங்கையின் கடப்பாட்டை வலியுறுத்துவதில் தான் பொம்பியோவின் அறிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை அவர் நினைவுப்படுத்தும் வகையில் தான் பாதுகாப்புத்துறை சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அந்தக் கடப்பாடுகளை மதித்து நடக்கப் போகிறாரா என்பது தான் முக்கியமான கேள்வி.

அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் ஷங்கரிலா விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஜெனீவா உடன்பாட்டுக்கு தாம் இணங்கவில்லை என்றும், அதனை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அது முரணானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த பத்தி எழுதப்படும் வரை கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்தோ, பாதுகாப்பு மறுசீரமைப்பு குறித்தோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போரில் இடம்பெற்ற மீறல்களைப் பற்றியோ அவற்றுக்கு பொறுப்புக் கூறுவது பற்றியோ நீதியை வழங்குவது பற்றியோ பேசுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.

போர் கால சம்பவங்களை மறந்து விட்டு எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.

அதைவிட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறைகளில் உள்ள படையினரை அடுத்த நாளே விடுவிக்க உத்தரவிடுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்திரு்நதார்.

அவரது இந்த நிலைப்பாடும் வாக்குறுதியும், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் சர்வதேச சமூகத்துக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் மனித உரிமைகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடப்பாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டவை. முன்னைய அரசாங்கம் ஒப்புக் கொண்ட விடயங்களை புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற விடயத்தை அமெரிக்கா கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தது.

இத்தகைய பின்னணியில் தான் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்த கட்டுப்பாடுகளை நினைவுப்படுத்தி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்த அறிக்கை அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிகைள் பேரவையில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நிலைப்பாட்டில் அமெரிக்க இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காவிடினும் தனது நட்பு நாடுகளின் ஊடாக அதனைச் செய்வதற்கு முனையக்கூடும்.

எனினும கோட்டாபய ராஜபக்‌ஷவின் முதலாவது உரையில் தனது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதோடு, உலக வல்லரசுகளுக்கு இடையேயான எந்தவொரு மோதலில் இருந்தும் விலகி நிற்கும் என்று கூறியதுடன், எங்களுடன் உறவுகளைப் பேணுகையில் நாட்டின் ஒற்றையாட்சி தன்மை மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சிங்களத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அவர் திடீரென இந்த விடயத்தை ஆங்கிலத்தில் கூறியமை கவனிக்கத்தக்கது. இதன்மூலம் வெளிநாடுகளுக்கு எங்களின் மீது தலையீடு செய்யக்கூடாது என்ற செய்தியை நேரடியாக கொடுக்கவே அவர் விரும்பினார்.

இவ்வாறானதொரு நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அறிக்கை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உவப்பான ஒன்றாக இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் அவருக்கு கசப்பானவை. அவற்றைக் கையில் எடுத்தால் அது தமக்கும் பாதகமாக அமையும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். ஏனென்றால் அவருக்கு எதிராகவம் போர்க்குற்றசாசட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் இரும்பு மனிதன் ஆட்சிக்கு வருகின்றார் என்ற தொனியிலும், போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகிறார் என்ற தொனியிலும் தான் தலைப்புகளை இட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் போர்க்குற்றச்சாட்டுகள், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களைக் கையில் எடுப்பதை அவரோ, அவரது நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை . இதற்கிடையே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு முக்கோண பாதுகாப்பு வியூகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரது இந்த நியமனத்துக்கு அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இந்த நியமனத்தினால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

அதுபோல ஐ.நா அமைதிப்படையில் இருந்து சில அவசியமான சூழ்நிலைகள் தவிர இலங்கைப் படைகளை முழுமையாக நீக்கப் போவதாக ஐ.நாவும் அறிவித்திருந்தது.

இவ்வாறான கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கியிருந்தார் மைத்திரிபால சிறிசேன.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் இன்னும் குறைந்தது ஒரு வருடத்துக்கு இராணுவத் தளபதியாக இருப்பார் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு செயலாளராக நியமித்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இறுதிகட்டப் போரில் 53ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர். இறுதி கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர் என்ற குற்றசாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்.

இவர்கள் இருவரையும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ தனிப்பட்ட முறையில் தொடர்புகளை பேணி உத்தரவுகளை வழங்கினார் என்பது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு.

பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்பதை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன “நந்திக்கடலுக்கான பாதை” நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றிணைந்து செயலாற்றிய இறுதி போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள மூவர் இப்போது இலங்கையின் முக்கியமான மூன்று அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ இருக்கிறார். பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இருக்கிறார். இராணுவத்தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இருக்கிறார்.

இவ்வாறான ஒரு சிக்கலான நிலையில் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களை சர்வதேச சமூகம் வலியுறுத்தாமல் இருக்காது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் புதிய அரசாங்கம் இருக்கப் போவதில்லை.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச அணுகுமுறைகள் மாற்றமடையலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏற்கனவே சர்வதேச சமூகத் எடுத்துள்ள நடவடிக்கைகளை விட்டு பின்வாங்க முடியாது.

அதுவும், 10 ஆண்டுகளுக்கு முந்தி போரின் போது மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் உயர் அதிகாரம் படைத்தவர்களாக மாறியிருப்பதை சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எவ்வாறு கையாளப் போகின்றன என்பது இப்போது எதிர்பார்ப்புக்குரிய விடயமாகவே இருக்கிறது.

– tamilwin

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply