பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட உள்ள சான்றுப்பொருட்கள்: யாழ்.மேல் நீதிமன்றம் அறிவிப்பு – Sri Lankan Tamil News

பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட உள்ள சான்றுப்பொருட்கள்: யாழ்.மேல் நீதிமன்றம் அறிவிப்பு

இந்த செய்தியைப் பகிர்க

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உட்பட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சான்றுப் பொருட்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் அவற்றை பகிரங்க ஏல விற்பனையில் விற்றுத் தீர்க்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக முன்றலில் எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றின் கட்டளைப்படி சான்றுப் பொருட்களின் பகிரங்க ஏல விற்பனை இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் தொடர்பான வழக்குகள் நிறைவடைந்துள்ளன. இச் சம்பங்களின் போது கைது செய்யப்பட்டோருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்த வழக்குகளுடன் தொடர்புடைய சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சாவும், சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்தநிலையில், இந்த வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 4 மீன்பிடிப் படகுகள், அவற்றுக்கான 4 வெளியிணைப்பு இயந்திரங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 15 சைக்கிள்கள், எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட வெற்று பிளாஸ்ரிக் கான்கள், ஜீ.பி.எஸ் கருவி, நங்கூரம், குழாய்கள் உள்ளிட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சான்றுப் பொருட்களை அரசுடமையாக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சான்றுப்பொருட்கள் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக முன்றலில் வைத்து பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply