தமிழர்களிற்கு ரணிலின் மகிழ்ச்சியான செய்தி – நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை மஹிந்த – Sri Lankan Tamil News

தமிழர்களிற்கு ரணிலின் மகிழ்ச்சியான செய்தி – நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை மஹிந்த

இந்த செய்தியைப் பகிர்க

தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரல் கொடுப்பவர்கள், உத்தமர்கள் அல்லர் என்றும், அவர்கள் இந்த நாட்டை நாசமாக்கிய ஊழல் செய்த கொலைகாரர்கள் என்றும், இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது என்பதோடு, புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அரசியல் சூழ்ச்சியை முறியடித்து தான் மீண்டும் பிரதமராகுவேன் என, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பியதாகவும், அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் தான் மீண்டும் பிரதமராகியுள்ளதாகவும், எனவே, தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பதுடன், தன்னை நம்பும் தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாட்டில் சகல மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதனைப் புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் தான் மீண்டும் பிரதமராகியதன் பின்னர் ஆற்றிய உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன் என்றும் அதலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கவுள்ளதாகவும், மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கோ, சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்ககப்போவதில்லை என்றும் அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என்கிறார் மஹிந்த

தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும், அதனை நிறைவேற்ற தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மூவின மக்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, நாடு பிளவுபடாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் நிலையில், எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற சொற்பதங்கள் வேண்டுமானால் புதிய அரசியலமைப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிகாரங்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனாலேயே, முன்னெச்சரிக்கையாக புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று அதனைத் தடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், அதனை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், புதிய அரசியலமைப்பை ஆதரிக்குமாறு ஏன் எதிர்க்கட்சியான தங்களைக் கோரவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் நாட்டை வெளிநாடுகளுக்குத் தாரைவார்ப்பதாக குற்றம் சுமத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது, வடக்கு மற்றும் கிழக்கை தாரைவார்த்து கொடுக்கம் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் செயற்படுவதாகவும், சர்வதேச சமூகத்தின் பலம் பொருந்திய அந்த நாடுகள் எவை என்று சாதாரண மக்களுக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதனூடாக புதிய அரசமைப்பை முன்வைக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply