வாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… – Sri Lankan Tamil News

வாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…

இந்த செய்தியைப் பகிர்க

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாகனத்தை உருமாற்றியமை, காவற்துறையினரின் சமிஞ்சைக்குக் கட்டுப்பட்டு வாகனத்தை நிறுத்தாது சென்றமை, முன் ஆசனத்தில் அதிகளவு நபர்களை ஏற்றிச் சென்றமை மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்காது வாகனம் செலுத்தியமை ஆகிய நான்கு குற்றங்களுக்கு பட்டா வாகனச் சாரதிக்கு மொத்தம் 77 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை போக்குவரத்துக் காவற்துறையினர் வழிமறித்துள்ளனர். எனினும் அதன் சாரதி நிறுத்தாது சென்றுள்ளார். வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்று வழிமறித்த காவற்துறையினர், சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன், பட்டா வாகனத்தை தடுத்துவைத்தனர்.

சாரதிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவற்துறையினர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர். சாரதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் (21) முன்னிலையானார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றியமை, காவற்துறையினரின் சமிஞ்சைக்குக் கட்டுப்பட்டு வாகனத்தை நிறுத்தாது சென்றமை, முன் ஆசனத்தில் அதிகளவு நபர்களை ஏற்றிச் சென்றமை மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்காது வாகனம் செலுத்தியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களை சாரதிக்கு எதிராக முன்வைத்து குற்றப்பத்திரத்தைப் காவற்துறையினர் தாக்கல் செய்தனர்.

பட்டா வாகனத்துக்கு பின்பக்கம் கூடாரத்துடனான தட்டி அடைத்தமை தொடர்பில் அனுமதிப் பெறப்படவில்லை என்பதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அறிக்கையையும் காவற்துறையினர் மன்றில் முன்வைத்தனர். குற்றப்பத்திரம் சாரதிக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.

அதனடிப்படையில் வாகனத்தை உருமாற்றிய குற்றத்துக்கு ஆகக் குறைந்த தண்டப்பணமான 50 ஆயிரம் ரூபாவை விதித்து மன்று கட்டளையிட்டது. ஏனைய மூன்று குற்றங்களுக்கும் 27 ஆயிரத்து 500 ரூபா என மொத்தம் 77 ஆயிரத்து 500 ரூபாவைச் செலுத்த சாரதிக்கு மன்று கட்டளையிட்டது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் மோட்டார் சைக்கிள் தொடக்கம் அனைத்து ரக வாகனங்களிலும் உருமாற்றம் செய்தால் குறைந்தது 50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு லட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப்பணம் அறவிட முடியும் என மோட்டார் போக்குவரத்து சட்ட ஏற்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply