மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது: சஜித் காட்டம் – Sri Lankan Tamil News

மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது: சஜித் காட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெரிதாக இனத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித தெளிவும் இன்றியே கூத்தடிக்கின்றனர். வெளிநாட்டுச் செலாவணி அதிகமாக நாட்டுக்கு வருவது, வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் மூலமாகவாகும். பல நாடுகளும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கு வழங்கும் எரிபொருளை நிறுத்தி விட்டால், நாம் என்ன செய்வது?

இனத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும். இந்த நாடு முறையான சிங்கள பௌத்த நாடாயின், இன, மத, குல பேதங்கள் இங்கு இருக்கக் கூடாது. மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது.

இப்படியான, இனவாதத்தை தூண்டுபவர்கள்தான் அலரிமாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் நுழைந்து தனது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். மக்கள் இந்த இனவாதத்துக்கு மயங்குவதில்லை.

புத்தபெருமான் சகல உயிர்களும் நல்லமுறையில் உயிர் வாழ வேண்டும் என்றே போதனை செய்தார். மாறாக, சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் நல்ல முறையில் உயிர் வாழ வேண்டும் என போதிக்கவில்லை. இன்று இனவாதம் பேசி நாடகமாடுபவர்கள் பௌத்த மதத்தைப் பற்றியாவது முறையாக தெரிந்தவர்கள் அல்லர்.

காட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர். நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும், மறுநாள் தமிழ் மக்களுக்கும் என திறந்து வைத்து வருகிறேன். நான் செய்வதுதான் உண்மையான நல்லிணக்க செயற்பாடு என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply